மோடியின் அடுத்த அதிரடி திட்டம் இது தான் !! ஜொலிக்கப் போகும் சூப்பர் டிஜிட்டல் வில்லேஜ் !!

By Selvanayagam PFirst Published May 29, 2019, 11:55 PM IST
Highlights

மோடி இரண்டாவது முறையாக  இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவுடன், டிஜிட்டல் கிராம திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதன்படி அனைத்து கிராமங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் 'வைபை' வசதி அளிக்கப்பட உள்ளது

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து மோடி நாளை மாலை 7 மணிக்கு பிரதமராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

மேலும் புதிய அமைச்சரவையும்  நாளை  பதவி ஏற்கிறது. அதே நேரத்தில் புதிய அரசு உடனடியாக செயல்படுத்தப்பட உள்ள  திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி உள்ளது. அதன்படி முதலில் டிஜிட்டல் கிராம திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தில் சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு கிராமம் என 700 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் 'வைபை' வசதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் 'வைபை' வசதி அளிக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன.

சுகாதார திட்டத்தின் படி, கிராமங்களில் உள்ளவர்கள் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியும். இதன் மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும், என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!