
அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் ரத்துக்கு எதிராக, தினகரன் ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சி தீவிரம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் கடந்த 29-ந் தேதி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அணி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தது. சென்னையில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா நியமனம் ரத்து, தினகரன் துணை பொதுச் செயலாளராக நியமனம் ஆகியவை செல்லாது என்பது உள்பட அந்த பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கும்படி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தினகரன் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், என்.கோகுல கிருஷ்ணன், பி.செங்குட்டுவன் ஆகியோர் இந்த மனுவை நேற்று வழங்கினார்கள். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜிலா சத்யானந்த் கூறியதாவது-
‘‘சென்னையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது. ஏனென்றால் அந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும், வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.
கட்சியின் துணை விதிகளின்படி, பொதுக்குழுவின் ஐந்தில் ஒரு பகுதி உறுப்பினர்கள் பொதுச் ெசயலாளரை அணுகி கோரிக்கை விடுத்தால் பொதுக்குழுவை கூட்டலாம். இதுபோன்ற எந்த நடைமுறைகளும் அந்தக் கூட்டத்தில் பின்பற்றப்படவில்லை.
மேலும் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழில், யார் அழைக்கிறார்கள் என்பதற்கான கையெழுத்து இல்லை. இது பணபலம், நிர்பந்தம் மூலம் கூட்டப்பட்ட கூட்டம்’‘.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ஏற்கனவே அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 7 லட்சம் பிரமாணப் பத்திரங்களை, இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு வாபஸ் பெற முயற்சி செய்வதை ஏற்கக்கூடாது என்றும், அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
‘‘எங்களுடைய அனுமதி இன்றி, எங்களுடைய பிரமாணப் பத்திரங்களை யாரும் வாபஸ் பெற முடியாது’‘ என்றும், விஜிலா சத்யானந்த் கூறினார்.