அரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு..? தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..!

By Asianet TamilFirst Published Sep 27, 2021, 8:50 AM IST
Highlights

ராமேஸ்வரத்தில் அரசாணையை மீறிய அமைச்சர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு தமிழக ஆளுநக்குப் புகார் அனுப்பியுள்ளது.
 

கடந்த காலத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை என்ற ஓர் அமைச்சகம் இருந்ததே தெரியாத அளவுக்கு பணிகள் எதுவும் தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது இத்துறை தொடர்பான செய்திகள்தான் தினந்தோறும் வெளியாகின்றன. அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து பல அறிவிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு, பத்திரிகையாளர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். இதேபோல் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்குப் புகார் மனு அளிப்பியுள்ளார். அதில், “கொரோனா பரவல் காரணமாக தமிழக கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு அமைச்சர் சேகர் பாபு செப்.25 சனி அன்று ஆய்வுக்கு வந்தார். கோயில் திறக்கப்பட்டிருக்கும் நாளில் ஆய்வு நடத்தியிருந்தால், பக்தர்களின் கருத்துக்களை கேட்டிருக்கலாம்.
ஆனால், கோயில் மூடப்பட்டிருந்த நாளில் ஆய்வு செய்ததோடு, அரசு உத்தரவை மீறி சமூக இடை வெளியின்றி நுாற்றுக்கணக்கான கட்சியினருடன் தரிசனம் செய்தார். அரசின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய அமைச்சரே இதுபோல் செய்தது அரசாணையை மீறிய செயல். அரசாணையை மீறிய அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!