காமராஜரை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கொடுத்தாரா கருணாநிதி..? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடியார் பதிலடி..!

By Asianet TamilFirst Published Apr 4, 2021, 9:47 AM IST
Highlights

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜானகி அம்மாள் இறப்பின்போது என்ன முடிவு எடுக்கப்பட்டதோ அதே முடிவைதான் நானும் பின்பற்றினேன் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 

தேர்தல் பிரசாரத்தில் ‘கருணாநிதிக்கு மெரினாவில் ஆறடி நிலம் கொடுக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா?’ என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி வருகிறார். இதற்கு சேலம் மேட்டூரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரசாரத்தில் பேசும்போது, “மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், முன்னாள் முதல்வர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது. ராமாவரம் தோட்டத்தில் இடம் உள்ளது. அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகள் வாயிலாக தெரிவித்தார்.
அதேபோல முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் இறந்தபோது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய வலியுறுத்தினார்கள். ஆனால், காமராஜர் தற்போது முதல்வராக இல்லை. எனவே, முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என கருணாநிதி தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று நான் சொன்னேன். அதேவேளையில் கருணாநிதியை அடக்கம் செய்ய 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே வழங்க முன்வந்தோம். ஆனால் அதை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் சென்றார். நீதிமன்ற ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்பட்டது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜானகி அம்மாள் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அதே முடிவைதான் நானும் பின்பற்றினேன். உண்மை இப்படி இருக்க, தனது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

click me!