திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் ஜெயிக்கணும்... இல்லாவிட்டால் பாஜக அதை நடத்திடும்.. ப.சிதம்பரம் அலர்ட்!

By Asianet TamilFirst Published Apr 3, 2021, 9:05 PM IST
Highlights

தேர்தலில் திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அப்படி பெற்றால்தான் பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா என பாஜக தலைவர்கள் பலரும் கடைசி நேரத்தில் படையெடுக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள் பேசப் பேச, தமிழக மக்கள் அவர்களுடைய உண்மையான நிலையைப் புரிந்துகொள்வார்கள். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்ததும் இங்கே கலவரம் வெடிக்கிறது.
பிரதமர் மோடி வந்தவுடன் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடக்கிறது. இவையெல்லாம் பாஜவுக்குக் கைவந்த கலைதான். ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை. ஆவணம்தான் கிடைத்தது என்றால், அது எவ்வளவு மோசமான நடவடிக்கை. பாஜக, அதிமுகவினர் வீடுகளில் சோதனை என்பதே கிடையாது. ஆனால், தமிழகத்தில் அனைத்து வருமான வரி சோதனைகளும் ஒரே திசையைச் சுட்டிக்காட்டி நடக்கின்றன.
தேர்தலில் திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அப்படி பெற்றால்தான் பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது. பெண்கள் நலனை பற்றிப் பேச அருகதையே இல்லாத கட்சி பாஜக. இந்தக் கட்சியிடம் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது எல்லோரு அறிந்ததுதான். ஆனால், பாஜக கற்றுத் தரும் தேர்தல் பாடம் என்றால், அது தேர்தல் திருட்டு. அது எங்களுக்குத் தெரியாது. கற்றுக்கொள்ளவும் மாட்டோம்.
 நடிகர் ரஜினிக்கு விருது கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த விருதைக் கொடுத்திருக்க வேண்டும். உள்ளடி வேலை அதிமுக - பாஜக கூட்டணியில்தான் அதிகமாக நடக்கிறது. எங்கள் கட்சியில் உள்ளடி வேலை எதுவும் கிடையாது. உள்ளடி வேலை எனக் கூறுவதெல்லாம் கற்பனை. தேர்தலுக்குப் பிறகு போலீஸாரைவிட நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தீவிரமாகக் கண்காணிப்போம். தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது” என்று ப. சிதம்பரம் தெரிவித்தார்.
 

click me!