காட்பாடியில் துரைமுருகன் வெற்றிபெற டம்மி வேட்பாளரை நிறுத்தினாரா அதிமுக அமைச்சர்..? பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2021, 3:48 PM IST
Highlights

ஏலகிரியில் உள்ள துரைமுருகன் பங்களாவில் அதிமுகவில் யாருக்கு எங்கே சீட் தருவது என்பதை துரைமுருகன் சொல்லி வீரமணி முடிவு செய்தார். 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில், வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் வழங்கவில்லை கட்சி தலைமை. அதற்கு காரணம் அமைச்சர் வீரமணியே என்கிற குற்றச்சாட்டை பொதுவெளியில் பகிரங்கமாக கூறத் துவங்கியுள்ளார் அமைச்சர் நிலோபர் கபில். 

சென்னையில் இருந்து மார்ச் 11ஆம் தேதி வாணியம்பாடி திரும்பிய நிலோபர் கபில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் நெருக்கமாக இருக்கிறார் வீரமணி. ஏலகிரியில் உள்ள துரைமுருகன் பங்களாவில் அதிமுகவில் யாருக்கு எங்கே சீட் தருவது என்பதை துரைமுருகன் சொல்லி வீரமணி முடிவு செய்தார். இதற்காக ஒரு மீட்டிங் அங்கு நடந்ததாக எனக்கு தகவல் வந்தது. அதனால்தான் டம்மியான ராமு காட்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

நான் மாற்றுக் கட்சியினருடன் தொடர்பு வைத்துள்ளதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள். 1991இல் அதிமுகவில் இணைந்தேன், அப்போதிலிருந்து வேறு கட்சி நபர்களுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. இந்தப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து என்னை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்து செயல்படுகிறார் மா.செவாக உள்ள வீரமணி. இவர் தந்த நெருக்கடியால்தான் எம்.எல்.ஏக்களாக இருந்த ஜெயந்தி, பாலசுப்பிரமணி, பார்த்திபன் ஆகியோர் தினகரன் பின்னால் சென்றார்கள். எனக்கும் நிறைய தொந்தரவு தந்தார். நான் அதனை தாங்கிக்கொண்டு கட்சியில் இருந்தேன். எனக்கு சீட் தராதது பிரச்சனையில்லை, சீட் தந்தவருக்காக வேலை செய்து வெற்றி பெறவைப்பேன்.

சி.ஏ.ஏ சட்டத்தால் என் சமூக மக்களிடம் நான் பட்ட அவமானத்தை சரி செய்ய என்னால் முடிந்தவரை போராடினேன். அந்தச் சட்டத்தால்தான் எம்.பி தேர்தலில் வாக்கு குறைந்தது, என் செயல்பாடுகளால் அல்ல. பாஜகவுடன் எங்கள் கட்சி கூட்டணி வைத்ததால்தான் இஸ்லாமியர்கள் வாக்குகளை வாங்க முடியவில்லை. மறைந்த ஜெயலலிதாவுக்கும், முதல்வர், துணை முதல்வருக்கும் விசுவாசமாக இருப்பேன்” என்றார் கண்ணீருடன்.
 

click me!