அப்பல்லோவில் “சசி”யிடம் ஜெ., சொன்னது என்ன..? ரகசியத்தை உடைத்த திவாகரன்..!

First Published Nov 18, 2017, 2:33 PM IST
Highlights
dhivakaran reveals apollo video secret


வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களின் கடமையை செய்வதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சோதனையின் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் சோதனையில் அரசியல் சதி இருப்பதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.

கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அங்கே தங்கியிருந்ததுதான் சோதனைக்குக் காரணம் எனவும் இந்த சோதனை மன வேதனை அளிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தி களங்கம் ஏற்படுத்தியதை ஏற்க முடியாது எனவும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேச உள்ளதாக மக்களவை துணை தலைவர் தம்பிதுரையும் களங்கம் ஏதும் ஏற்படவில்லை என அன்வர் ராஜா எம்பியும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இப்படியாக பலரும் பல கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள், அவர்களின் கடமையை செய்கிறார்கள். எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதை அடுத்து நிறைய மாற்றங்கள் நிகழும். ஜெயலலிதா வீட்டில் இருந்து லேப்டாப், பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டது பற்றி எதுவும் தெரியாது. ஆனால் என் வீட்டிலிருந்து லேப்டாப்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன் என திவாகரன் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, சசிகலாவிடம் ஜெயலலிதா வீடியோ எடுக்க சொன்னதாக திவாகரன் கூறியுள்ளார். பின்னாளில் பிரச்னை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதா வீடியோ எடுக்க சொன்னதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
 

click me!