
திமுக நடத்திய மனித சங்கிலி கூட்டத்தில் கலந்து கொண்ட தயாநிதி மாறனின் பர்சை கூட்டத்திலிருந்த ஒரு ஆசாமி பிக்பாக்கெட் அடித்து சென்றுவிட்டார். இது பற்றி தயாநிதி மாறன் புகார் அளிக்காமல் சென்றார்.
பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் கடந்த 16 நாட்களாக பொதுமக்கள் வங்கி வாயிலில் கத்துகிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்தியா முழுதும் முற்றிலுமாக தொழில் வணிகம் அத்தனையும் முடங்கி போனது.
இதையடுத்து பல்வேறு எதிர்கட்சிகள் இதை கண்டித்தன. திமுகவும் டெல்லியிலும் , தமிழகத்திலும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. திமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுதும் முன்னணி தலைவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டனர். மு.க.ஸ்டாலின் புரசைவாக்கத்தில் கலந்துகொண்டார். தயாநிதிமாறன் சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலை அருகே மனித சங்கிலி கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது அவரது பேட்டி திடீரென தடைபட்டது. லேசாக உடலை குலுக்கினார். பின்னர் கீழே குனிந்து பார்த்தார். பின்னர் பேட்டியை தொடர்ந்தார். பேட்டி முடிந்ததும் தனியாக சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன் மோகனை அழைத்து மதன் என் பர்சை யாரோ பிக்பாக்கெட் அடித்து சென்றுவிட்டார்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விட்டார். போலீசிலும் புகார் அளிக்கவில்லை.
இது பற்றி கட்சிக்காரர்கள் கூறும்போது தயாநிதி மாறன் பேசும் போது சிகப்பு நிற பனியன் அணிந்திருந்த நபர் அவரது பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு திருடி சென்றார் என்று தெரிவித்தனர்.
ஆனால் அந்த நபரை யாரும் பிடிக்கவில்லை. தயாநிதி மாறன் பொதுவாக பார்மல் பேண்ட் போட்டு சர்ட் போட்டு இன் பண்ணி வருவார். பேண்டின் வலது கால் முன்பக்க பாக்கெட்டில் பர்சை வைத்துள்ளார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி பர்சை பிக்பாக்கெட் அடித்து சென்றுள்ளான்.
புகார் எதுவும் தயாநிதிமாறன் தரப்பில் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.