கொரோனாவாக இருந்தாலும், எல்லை சவாலாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் உள்ளது- மோடி பெருமிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 3:34 PM IST
Highlights

கொரோனா என்ற இந்த கொடிய காலகட்டத்தில் மில்லியன் கணக்கான என்சிசி படையினர் அரசுடனும்  சமூகத்துடன் இணைந்து பணியாற்றி விதத்தை நான் பாராட்டுகிறேன். இதில் பொதுமக்களும் இணைந்து கொள்வதன் மூலம் மிகப்பெரிய சவால்களை நாம் தீர்க்க முடியும். 

கொரானா வைரஸ் சவாலாக இருந்தாலும் அல்லது எல்லை சவாலாக இருந்தாலும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியாவால் முடியும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும் பேசிய அவர், வைரஸ் அல்லது எல்லையின் சவாலை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா ஒவ்வொரு தருணத்திலும் தனது அசாத்திய திறமையை உலகிற்கு காட்டியுள்ளது. தடுப்பூசி விஷயத்தில் இன்று நாம் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். அதேநேரத்தில் ராணுவத்தை  வலுப்படுத்தும் முயற்சிகளும்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இன்று இந்தியாவிடம் உலகின் மிகச்சிறந்த போர் இயந்திரங்கள் உள்ளன. மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை தந்துள்ளது. இந்த விமானங்கள் காற்றின் பறந்தபடி எண்ணெய் எரிபொருளை நிரப்பும் வல்லமைக் கொண்டது. பிரான்சில் இருந்து இந்தியா நோக்கி வரும்போது வளைகுடா நாட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்குமான உறவு வலுவானது என்பதை குறிக்கிறது. ஒரு காலத்தில் நாட்டில் மாவோயிசம், நக்சலிசம் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. நமது பாதுகாப்பு படை வீரர்களின் அயராத பணியால்,  நாட்டில் நக்சலிசம் குறைந்துள்ளது. 

கொரோனா என்ற இந்த கொடிய காலகட்டத்தில் மில்லியன் கணக்கான என்சிசி படையினர் அரசுடனும்  சமூகத்துடன் இணைந்து பணியாற்றி விதத்தை நான் பாராட்டுகிறேன். இதில் பொதுமக்களும் இணைந்து கொள்வதன் மூலம் மிகப்பெரிய சவால்களை நாம் தீர்க்க முடியும். நான் உங்களைப் பார்க்கும்போது புது நம்பிக்கை பிறக்கிறது. உங்களால்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் அங்கு என்சிசி கேடட்கள் இருப்பதை காணமுடிகிறது. தேசத்தின் பாதுகாப்பில் என்சிசியின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் எல்லை மற்றும் கடல் எல்லை வலையமைப்பை பாதுகாக்க என்சிசியின் பங்கேற்பு விரிவு படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் என்சிசி கேடட்கள் பயிற்சி பெறுகின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் கேடட்கள் ஆவர். இவ்வாறு கூறினார். 
 

click me!