
First time K.A.Sengottaiyan reacts| கோவை மாவட்டம் அன்னுாரில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, கடந்த மாதம் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் விழா மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படம் இடம்பெறவில்லை. இதை சாக்காகக்கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த அந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் அதிரடியாக புறக்கணித்தார்.
அன்று தொடங்கி இன்று வரை எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. அதிமுகவில் மிகவும் சீனியரான செங்கோட்டையன், எந்த சூழலிலும் அக்கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்து வந்துள்ளார். கட்சி மிக இக்கட்டான காலக்கட்டங்களில் இருந்தபோதும்கூட அதிமுகவுக்கு எதிராக ஒருவார்த்தைகூட செங்கோட்டையன் பேசியதில்லை.
அத்தகைய செங்கோட்டையன், திடீரென எடப்பாடி பழனிசாமியை புறக்கணிக்கத் தொடங்கியது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ள நிலையில், அதிமுக கலகலத்துக் கொண்டிருக்கும் நிலையில், செங்கோட்டையனின் செயல்பாடுகள், எடப்பாடி பழனிசாமிக்கு தீராத தலைவலியானது.
இந்த சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 14) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, பேரவை வளாகத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் இதை புறக்கணித்தார். சட்டப்பேரவைக்குள்ளும் கூட எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை, அவர் தவிர்த்தார்.
EPS vs Sengottaiyan | செங்கோட்டையன் vs EPS என்ன பிரச்னை? எடப்பாடி சொன்ன அதிரடி பதில்!
அதேபோல், வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாகவே சட்டசபைக்கு வந்த கே.ஏ. செங்கோட்டையன், திடீரென சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனியே ஆலோசனை நடத்தினார். இது அதிமுகவினர் மத்தியில் பல யூகங்களை கிளப்பியது. அவையில் தனி இருக்கை கேட்கிறாரோ என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உங்களை தவிர்க்க என்ன காரணம் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "என்னை சந்திக்காமல் தவிர்ப்பதற்கான காரணத்தை செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள். காரணம் என்னவென்று அவரை கேட்டால் தான் தெரியும், என்னை கேட்டால் என்ன தெரியும். இதெல்லாம் தனிப்பட்ட பிரச்னைகளை கேட்கும் இடம் இதுவல்ல" என்று ஆவேசமாக பதில் அளித்தார்.
மேலும், "இங்கு என் பின்னால் பாருங்கள். இங்கு கூட நிறைய பேர் வரவில்லை, அவர்கள் ஏன் வரவில்லை என கேட்க முடியுமா?. அவரவர்களுக்கு வேறு வேலை இருக்கும். அதிமுக சுதந்திரம் தரும் கட்சி, திமுக போன்று அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. நான் என்றும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. திமுக போன்று வாரிசு அரசியல் இங்கு இல்லை, குடும்பக் கட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சி இங்கு இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
இந்த பரபரப்பான சூழலில், சென்னையில் செய்தியாளர்கள் கே.ஏ. செங்கோட்டையனிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சபாநாயகரை, சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக நான், சபாநாயகரை சந்தித்தேன். சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக கடினம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
செங்கோட்டையன் ஏன் உங்களை தவிர்க்கிறார்! கடுப்பான இபிஎஸ்! என்ன பதில் சொன்னாரு தெரியுமா?