
ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஆய்வு என்ற பெயரில் அதிரடியாகக் களம் இறங்கி பொதுமக்களிடம் கருத்து கேட்பதும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஆலோசனை கூறுவதும் என களத்தில் இறங்கி பிரபலம் ஆகிவிட்டார்.
அவரது பாணியைப் பின்பற்றி இன்று களத்தில் இறங்கியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் இன்று சென்னை கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையின் பிரதான பகுதியாகத் திகழ்கிறது கோயம்பேடு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கி வரும் பகுதி. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு சந்தை ஆகியவை நெருக்கடி நிறைந்த பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கே கோயம்பேடு மார்க்கெட் ஒட்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் என்று ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் புகார்களைக் கூறி வருகின்றனர்.
காய்கறிகள் விற்பனையாகாமல் தேங்கும் போது, அவற்றையும் அழுகிய வீணாகிப் போன காய்கறிக் குப்பைகளையும் அங்கங்கே வீசி விடுவதால், அவை மூலம் பரவும் கொசுக்கள் ஈக்கள் ஆகியவற்றாலும் அந்தப் பகுதியே சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது. இது குறித்து, கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குச் செல்லும் சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது, வியாபாரிகள் சிலரே கூட புகார்களைத் தெரிவிப்பதுண்டு. எவ்வளவுதான் மாநகராட்சி மூலம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், குப்பைகள் மேலும் மேலும் சேர்வது தவிர்க்கப் பட முடியாததாகத் திகழ்கிறது.