
கடந்த பத்தாண்டுகளுக்குள் செய்தி சேனல்கள் அதிகரித்து விட்டதால், அரசியல் கட்சிகளின் ஒரே பிரதான பிரசார மையமாகத் திகழ்கின்றன செய்தி ஊடகங்கள். விவாதங்கள் என்ற பெயரில் கட்சிகளின் சார்பில் பங்கேற்பவர்கள் தங்கள் மனம் போன போக்கில் தெரிவிக்கும் கருத்துகள், கட்சியின் அதிகார பூர்வ கருத்துகள் என்ற வகையில் பார்க்கப் படுவதால், கட்சிகளுக்கும், கட்சிகளுக்குள் அவர்களுக்கும் பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன.
எனவே, ஊடகங்களில் தங்கள் கட்சி சார்பில் யார் விவாதங்களில் பங்கேற்பார்கள் என்று ஒரு பட்டியலை இப்போதெல்லாம் எல்லாக் கட்சிகளுக்கும் வெளியிட்டு விடுகின்றன. முன்பெல்லாம், கட்சியின் பேச்சாளர் என்ற அந்தஸ்து வழங்கப் பட்டு, ஊர் தோறும் நடக்கும் கட்சிக் கூட்டங்களில் பேசுவதற்கு அவர்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படும் . இப்போது இந்த நடைமுறை ஊடகங்களில் பேசுபவர்களுக்கும் திணிக்கப் பட்டு விட்டது.
அண்மையில் அதிமுக., இரண்டாகப் பிரிந்து, பிளந்து, தொடர்ந்து மூன்றாகி, அந்த மூன்றில் இரண்டு ஒன்று சேர்ந்து இப்போது இரண்டாகி நிற்கிறது. ஆனால், கட்சியின் பெயரும் சின்னமும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அணிக்கு கிடைத்துவிட்டதால், இப்போது அங்கே பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சி மன்றக் குழு, கட்சியின் வழிகாட்டல் குழு என குழுக்கள் அமைப்பதற்கும் பஞ்சமில்லை.
இதனைத் தொடர்ந்து இப்போது ஊடகக் குழு அமைக்கப்பட்டு வருகிறது. கட்சியின் அதிகார பூர்வ ஊடகக் குழுவே, ஊடகங்களில் கட்சியின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். இதனை ஓர் அறிக்கையாக இன்று அதிமுக., வெளியிட்டுள்ளது.
அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில்,
அதிமுக சார்பில் ஊடகங்களால் நடத்தப்படும் விவாதங்களில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிப்பதற்கென்று, ஒரு புதிய குழு விரைவில் அமைக்கப்படவிருக்கிறது. இந்தக் குழுவில் இடம்பெறும் அதிமுக.,வினர் மட்டுமே ஊடகங்களில் நடபெறும் விவாதங்களில் கலந்து கொண்டு அதிமுக.,வின் சார்பில் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக, அரசின் சாதனைகளையும், கட்சியின் நிலைப்பாடுகளையும், கட்சி கூற விரும்பும் கருத்துகளையும் எடுத்துரைப்பார்கள் இந்தக் குழுவில் இடம் பெறுபவர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன் பிறகே, ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கட்சியின் சார்பில் குழுவில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள். -என்று கூறப்படிருந்தது.
எனவே, விரைவில் அதிமுக.,வின் ஊடகக் குழு தயார் செய்யப் பட்டு, ஊடகங்களுக்கு விரைவில் அறிவிக்கப் படும். அவர்களே அனைத்து விதமான விவாதங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர்.
ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி, கழக இணை ஒருங்கினணைப்பாளர் என்று கையெழுத்திட்டு, இந்த அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்ப பட்டுள்ளது.