அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி.. கூட்டணிக்கு பாமக போடும் புது நிபந்தனை.. அதிர்ச்சியில் அதிமுக–திமுக!

By Selva KathirFirst Published Sep 23, 2020, 5:14 PM IST
Highlights

தமிழக அரசியல் கூட்டணி கணக்கில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு பாமகவிற்கான மவுசு கூடியிருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள ராமதாஸ் தயாராகி வருகிறார்.

தமிழக அரசியல் கூட்டணி கணக்கில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு பாமகவிற்கான மவுசு கூடியிருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ள ராமதாஸ் தயாராகி வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. முக்கிய கட்சிகளான அதிமுக – திமுக தேர்தலுக்கான வியூகத்தை தீவிரமாக வகுத்து வருகின்றன. கடந்த தேர்தல்களை போல் இந்த தேர்தல் இரண்டு தலைவர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்காது. மாறாக திமுக – அதிமுக இடையிலான தேர்தலாகியுள்ளது. எனவே இந்த  தேர்தலில் எந்த கட்சி சிறப்பான வியூகம் அமைக்கிறதோ அந்த கட்சி தான் வெற்றி பெறும். அதிலும் கூட்டணி வியூகம் இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையாக இருந்தாலும் சரி கூட்டணி கட்சிகளை மிகவும் அனுசரித்து சென்று வருகின்றனர்.

பாமக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது. அண்மையில் ராமதாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அய்யா மருத்துவர் ராமதாஸ் என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். கூட்டணியில் இருக்கும் அதிமுக தலைமை ஒரு பக்கம் வாழ்த்துச் சொல்கிறது என்றால், எதிர்கட்சியான திமுக தலைவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அய்யா மருத்துவர் ராமதாஸ் என்று அடைமொழியோடு வாழ்த்துகளை கூறியுள்ளார்.

இதற்கு காரணம் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு தான். வட மாவட்டங்களில் அதிமுக, திமுகவிற்கு அடுத்து அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சியாக பாமக திகழ்கிறது. சில தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இணையான வாக்கு வங்கி பாமகவிற்கு இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக ராமதாஸ் இருப்பார். எனவே தான் அவரை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும், அவரை கூட்டணிக்கு இழுக்க திமுகவும் முயன்று வருகின்றன. இதனை ராமதாஸ் துவக்கம் முதலே புரிந்தே வைத்திருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட திமுக கூட்டணிக்கான வாய்ப்புகளையும் அவர் அடைத்துவிடவில்லை.

இதற்கு முந்தைய தேர்தல்களை பொறுத்தவரை எவ்வளவு அதிகமான தொகுதிகளை பெற முடியும் என்பது மட்டுமே பாமகவிற்கான கூட்டணி வாய்ப்பாக இருந்தது. ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி கலைஞராக இருந்தாலும் சரி தொகுதிகளின் எண்ணிக்கையை தாண்டி வேறு எந்த பேரமும அவர்களிடம் பேச முடியாத நிலையில் தான் பாமக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டதாக கருதுகிறது பாமக. கூட்டணி இல்லாமல் திமுக, அதிமுக தேர்தலில் வெல்வது கடினம். இதனை பயன்படுத்தி ஆட்சியில் பங்கு என்கிற நிபந்தனையை கூட்டணிக்கு முன்வைக்க ஏற்கனவே ராமதாஸ் முடிவுஎடுத்துவிட்டார்.

ஆட்சியில் பங்கு என்பதோடு அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி என்கிற புது நிபந்தனையை விதிக்கவும் ராமதாஸ் தயாராகிவிட்டதாக கூறுகிறார்கள். அன்புமணியை துணை முதலமைச்சராக்குவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என்று பகிரங்கமாக விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் என்கிறார்கள். இதன் மூலம் பாமக வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் கூட்டணிக்கு பெற முடியும் என்று நம்புகிறார் ராமதாஸ். வெறும் தொகுதிகளுக்காக கூட்டணி என்பதை தாண்டி வன்னியர் ஒருவரை துணை முதலமைச்சராக்குவதற்கான கூட்டணி என்கிற பிரச்சாரமும் வட மாவட்டங்களில் ஒர்க் அவுட் ஆகும் என்று ராமதாஸ் நம்புகிறார். ஆனால் இதனை திமுக, அதிமுக கட்சிகள் எப்படி அணுகப்போகின்றன என்பதில் தான் இருக்கிறது தேர்தலுக்கான வியூகம்.

click me!