துணை முதல்வர் ஓபிஎஸ்வுடன், வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் திடீர் சந்திப்பு.!

By T BalamurukanFirst Published Oct 3, 2020, 10:25 PM IST
Highlights

தேனியில் முகாமிட்டிருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்சை வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெரியகுளத்தில் திடீரென சந்தித்திருப்பது பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 


தேனியில் முகாமிட்டிருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்சை வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெரியகுளத்தில் திடீரென சந்தித்திருப்பது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சடுகுடு போட்டி இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஓபிஎஸ்..'ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் நான் தான் என்கிறார். இபிஎஸ் சசிகலா உதவியால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவன் என்கிறார். இவர்களுக்குள் நடக்கும் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற போட்டியில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சாதி ரீதியாக தென்மாவட்டமா? வடமாவட்டமா? என்கிற ரீதியில் எந்த பக்கம் எம்எல்ஏக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற பிரச்சனை வெடித்துள்ளது.

தென்மாவட்டம் என்றைக்குமே அதிமுகவிற்கு கைகொடுத்து தான் வந்திருக்கிறது.அதிமுக என்றாலே அது முக்குலத்தோர் கட்சி என்கிற அடைமொழி உண்டு. அந்த அளவிற்கு அதிமுக முக்குலத்தோர் கையில் தான் இருந்தது இருந்தும் வருகிறது என்பதை நிருபிக்க ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தம் நடத்தவும் தயாராகி வருகிறார். கட்சியும் ஆட்சியும் தன் பக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஓபிஎஸ். வடமாவட்டம் அதிகமான எம்எல்ஏக்களை தந்ததால் ஜெயலலிதா அமைச்சரவையில் அதிக அளவிற்கு அமைச்சர் பதவி வழங்கினார்.

தற்போது நடக்கும் முதல்வர் வேட்பாளர் யார் என்று இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்திற்கு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எடப்பாடி.பழனிச்சாமிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள்.இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி  முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியும் என்று தெரிவிக்கப்படும் என்ற நிலையில் ஓபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளம் பண்ணைவீட்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையில் அக்டோபர் 7ம் தேதி எம்எல்ஏக்கள் சென்னை வர உத்தரவு ,முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரிவிக்கப்படும் என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இப்படியொரு தகவல் ஓபிஎஸ்க்கு தெரியாதாம்.! அதன் பிறகு அந்த பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.


இந்தநிலையில் நாளை உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தினை ஓபிஎஸ் பார்வையிட இருக்கிறார் அதற்கு அழைப்பு விடுக்கவே தனது ஆதரவு எம்எல்ஏக்களான மேலூர் தொகுதி எம்எல்ஏ பொயிபுள்ளாள் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம். உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ நீதிபதி மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆகியோருடன் ஓபிஎஸ்சை சந்தித்து 15நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள்.இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும் மூக்கையாத்தேவர் சிலை திறப்புக்கான இடம் பார்வையிட வருகிறார் என்கிற வகையில் அதை அடக்கியிருக்கிறார்கள். "ஊர் வாயை மூடினாலும் உலைவாயை மூட முடியாது" என்பார்கள்; பொருத்திருந்து பார்ப்போம்.

click me!