இப்போதான் மக்களுக்கு நிம்மதி... மத்திய அரசின் முடிவை மெச்சும் டாக்டர் ராமதாஸ்..!

By Asianet TamilFirst Published Oct 3, 2020, 8:40 PM IST
Highlights

இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வருவாய் இழந்து தவிக்கும் கடன்தாரர்களுக்கு நிம்மதியளிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்களின் ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வருவாய் இழந்து தவிக்கும் கடன்தாரர்களுக்கு இது நிம்மதியளிக்கும்.
ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையிலும் கூட, வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கூறி வந்தன. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு உச்சநீதிமன்றமும் வந்திருந்த நிலையில், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னாள் தலைமைக் கணக்காயர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையிலான வல்லுனர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், சிறு தொழில் கடன்கள், கல்விக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டு உபயோகக் கடன்கள், கடன் அட்டை மீதான நிலுவைத் தொகை ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நாளை மறுநாள் 5-ம் தேதி அதன் தீர்ப்பை வழங்கும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு கடன்தாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமைப்பு சார்ந்த தொழில்துறை, அமைப்பு சாரா தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அவர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து வகையான கடன் தவணைகளை செலுத்துவதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்; அவ்வாறு ஒத்திவைக்கப்படும் கடன் தவணைகள் மீதான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமகதான் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தது.” என அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!