
டெங்கு காய்ச்சல் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தால் இந்த அளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
‘டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு டெங்கு காய்ச்சல் இருக்கிறது என்பதை ஏற்காததுதான் பிரச்சனை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
அன்புமணி ராமதாஸ், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றார்.
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தினார். நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாது; ஆனால் பிளேட்ளெட் செல்லை அதிகப்படுத்தும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளது என்பதை அரசு ஏற்காததுதான், மிகப்பெரிய விஷயமாக மாறியுள்ளது என்றார். தர்மபுரி, ஈரோடு, திருப்பூர்
உள்ளிட்ட வட மாவட்டங்களில் டெங்கு அதிக அளவில் காணப்பட்டது.
ஆனால் ஆட்சியாளர்களோ, எங்க அம்மா ஆட்சியில் டெங்கு வராது என்று கூறினர். டெங்கு பாதிப்பு குறித்து ஆட்சியாளர்கள் மூடி மறைத்தார்கள். தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு டெங்குவின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் இந்த அளவுக்கு பெரிய பாதிப்பு இருந்திருக்காது. தமிழகத்தில் டெங்கு இருப்பதையே அரசு இன்னும் ஏற்கவில்லை.
அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு
செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.