ஜனநாயக முறைப்படி கனிமொழிக்கு மட்டும் நேர்காணல்.... வாழ்க திமுக ஜனநாயகம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2019, 11:53 AM IST
Highlights


மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடப்போகும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு போட்டியாக யாருமே விருப்பமனு தாக்கல் செய்யாத நிலையில் ஜனநாயக முறைப்படி நேர்காணல் நடந்துள்ளது. 


மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடப்போகும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு போட்டியாக யாருமே விருப்பமனு தாக்கல் செய்யாத நிலையில் ஜனநாயக முறைப்படி நேர்காணல் நடந்துள்ளது. 

மக்களவை தேர்தல் மற்றும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நேர்காணலை நடத்தி வருகிறது திமுக தலைமை. மக்களவை தேர்தலில் புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு பங்கு பிரித்துக் கொடுத்துவிட்ட திமுக 20 தொகுதிகளில் களம் காண இருக்கிறது. இந்நிலையில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. பல தொகுதிகளில் போட்டியிட ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். 

அதன்படி ஒரு தொகுதிக்கு பலர் போட்டியிடுவதால் அவர்கள் சிலரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சகோதரியும் அக்கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழி போட்டியிட உள்ள தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் அவரைத் தவிர வேறு எவரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. 

தமிழகத்தில் முன்னணியில் இருக்கக்கூடிய திமுகவில் தூத்துக்குடி தொகுதியில் கட்சியில் செல்வாக்குமிக்கவர்கள் பலர் இருக்க, கனிமொழியை தவிர யாருமே விருப்ப மனு அளிக்கவில்லை. சமத்துவம் போற்றும் கட்சியாக கருதப்படும் திமுகவில் தூத்துக்குடியில் யாருக்கும் போட்டியிட விருப்பம் இல்லாமல் போய்விடுமா?திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள். இன்னாள் தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரி போட்டியிட விருப்பமனு அளித்துள்ள போது அதையும் தாண்டி யாரால் அந்தத் தொகுதியில் போட்டியிட எப்படி முன் வரமுடியும்? 

அப்படியே தாக்கல் செய்தாலும் தூத்துக்குடியில் கோலோச்சும் முன்னாள் அமைச்சர்களான கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் செல்வாக்கை மீறி அடுத்து கட்சியில் தொடர முடியுமா..? ஒரு தொகுதிக்கு பலர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தால் நேர்காணல் செய்து உரியவரை தேர்வு செய்வது வழக்கம். ஆனால், தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரிடம் நேர்காணல் நடத்தி உள்ளது திமுக. 

தூத்துக்குடியில் எத்தனைபேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் கடாசி விட்டு கனிமொழிக்கு மட்டுமே சீட் ஒதுக்கப்படும் என்பது அக்கட்சியில் உள்ள அடிமட்டத் தொண்டர்களே அறிந்திருப்பர். அப்படி இருக்கும் போது கனிமொழியிடம் நேர்காணல் நடத்துவது கண்துடைப்பு வேலை. நேரடியாக அவரை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்து விட்டுப் போனால், திமுக தலைமையை யாரால் கேள்வி கேட்டுவிட முடியும்? இருப்பினும் திமுக ஜனநாயக முறைப்படி கனிமொழியிடம் நேர்காணல் நடத்தி இருக்கிறது. இதுதான் திமுகவின் ஜனநாயகம்...!

click me!