
வி.வி.ஐ.பி. அரசியல் கைதிகளை இந்திய சிறைகள் எப்படி நடத்துகின்றன? என்று ஒரு விவாதத்தையே உருவாக்கிட எத்தனிக்கிறது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லியிருக்கும் ஒரு விஷயம்.
அப்படி என்ன சொல்லிவிட்டார் தீபக்?...தான் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில், ’போயஸ் கார்டன் பங்களாவில் கடந்த ஞாயிறன்று நடந்த விஷயங்கள் எல்லாம் சசிகலாவுக்கு தெரியுமா?’ என்கிற கேள்விக்கு செம்ம கூலாக பதில் தந்திருக்கும் தீபக்...”இங்கு நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை எதையும் சசி அத்தையிடம் இருந்து மறைக்க முடியாது. அவருக்கு உடனடியாக தகவல் தெரிந்துவிடும். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட அவர் என்னிடம், ‘போயஸ் கார்டன் வீட்டை அக்காவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அதற்காக நீ அந்த வீட்டை விட்டுக்கொடு.’ என்று கேட்டார் என்று கூறியிருக்கிறார்.
இந்த தேசத்தையே உற்று நோக்க வைத்த, ஒரு மாநிலத்தின் மாஜி முதல்வரே முதல் குற்றவாளியாக இருந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன சிறையில் அடைபட்டிருக்கிறார் சசிகலா. இவ்வளவு சென்சிடீவான கைதிக்கு கெடுபிடி கள் எந்தளவுக்கு இருக்க வேண்டுமென்பது எல்லோராலும் யூகிக்க கூடிய ஒன்றே.
ஆனால் தீபக்கோ...சென்னையில் நடந்து கொண்டிருப்பவை சசிக்கு உடனடியாக தெரிந்துவிடுமென்றால் சசியின் அறையில் டி.வி. இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அதில் அரசு தொலைக்காட்சி அலைவரிசை தாண்டி தனியார் விஷயங்களும் கிடைக்கிறதா? செய்தி, சினிமா, கார்டூன், ட்பிள்யூ டபிள்யூ எஃப், சிரிப்பொலி, மியூஸிக் என அனைத்து வகையான சேனல்களும் தெரியும் என்றே தோண்றுகிறது. இது போக செய்தித்தாள்களும் அவருக்கு வழங்கப்படலாம்.
இதெல்லாம் சரி, போயஸ் கார்டனில் நடந்ததை உடனுக்குடன் கேள்விப்பட்ட சசி, அது குறித்து தீபக்கிடம் பேசியதாக தீபக்கே சொல்கிறாரே! அது எப்படி? ஒரு கைதியானவர் வெளியே இருக்கும் மனிதர்களிடம் பேச வேண்டுமென்றால் ஒன்று அவர்கள் அந்த கைதியை சென்று சந்திக்க வேண்டும், அல்லது கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனது வழக்கறிஞர் மூலமாக தகவல் தந்துவிடலாம்.
தீபக்கிடம் சசி பேசியது எந்த வகையில்? சசியை தீபக் சென்று சந்தித்ததாக தகவல் எதுவும் வரவில்லை. ஒரு வேளை தனது வழக்கறிஞர் மூலம் தீபக்கிடம் பேசி, அதற்கு தீபக்கும் பதில் சொல்லியிருக்கிறார் என்றால் வேலை நாளான திங்கட்கிழமையில் ஆரம்பித்து மூன்று நாட்களுக்குள் இத்தனை விஷயங்களும் நடந்து முடிந்துவிட்டனவா?
கைதியானவர் வெளியிலிருக்கும் நபருடன் தகவல் பரிமாற அத்தனை எளிதாக அம்சங்களை மாற்றியிருக்கிறதா இந்திய சிறைத்துறை? அல்லது சசிகலாவுக்காக பிரத்யேக சட்டதிட்டங்கள் எதையேனும் போட்டிருக்கிறதா கர்நாடக சிறைத்துறை.
தீபக் மிக வெளிப்படையாக சொல்லியிருக்கும் தகவலின் அடிப்படையிலே இந்த சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு விளக்கம் தரவேண்டிய பொறுப்பு கர்நாடக சிறை, சசி தரப்பு மற்றும் தீபக் மூன்று பேருக்குமே இருக்கிறது.
சசிக்கு கிடைக்கும் இந்த வசதி வாய்ப்புகள் சிறையின் எல்லா கைதிகளுக்கும் கிடைக்கிறதா என்ன?