
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், தான் ஜெயலலிதாவின் வாரிசு என சான்றளிக்க வேண்டும் என கிண்டி தாசில்தாரிடம் மனு அளித்து அதிர வைத்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை போயஸ் கார்டன் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில் ஜெயலலிதா திருமணம் செய்து கொள்ளாததால் அவருக்கு வாரிசுகள் என்று யாரும் இல்லை.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனுக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஜெயலலிதாவுக்கென்று அவர்கள் மட்டுமே உறவினர்கள்.
ஜெயலலிதா மறைந்த நிலையில் தீபா, தீபக் என இருவருமே தாங்கள் தான் ஜெயலலிதாவின் வாரிசு என கூறி வருகின்றனர். .
இந்நிலையில் ஜெயலலிதா வாரிசாக தன்னை அறிவிக்குமாறு ஜெயலலிதா அண்ணன் மகன், தீபக் சென்னை கிண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு மனு அளித்தார்.
இந்து மத சட்டப்படி இறுதி சடங்கு செய்தவரே இறந்தவரின் வாரிசாக கருதப்படுவார் என்பதைக் காரணமாக காட்டி தானே ஜெயலலிதாவின் வாரிசு என சான்றளிக்க வேண்டும் என தனது மனுவில் தீபக் தெரிவித்திருந்தார்.
ஆனால் தீபக் கொடுத்த மனுவை கிண்டி வாட்டாச்சியர் தள்ளுபடி செய்தார். மேலும் வாரிசு சான்றிதழ் பெற நீதிமன்றத்தை நாடுமாறும் தீபக்கிற்கு வாட்டாச்சியர் அறிவுறுத்தியுள்ளார்.