
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடைபெற இருக்கும் விசாரணை கமிஷனை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர் 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த நாட்கள் முழுவதும் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே அதிமுக அமைச்சர்கள் உடல்நலம் தேறி வருவதாகவும், சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இட்லி போன்ற உணவுகள் உட்கொண்டார் எனவும் தகவல்களை வெளியிட்டனர். ஆனால், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதா இறந்த நிலையில் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து சசிகலாவிடம் பதவிக்காக சண்டை போட்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தர்மயுத்தத்தை நடத்தி வந்தார்.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும், அவரால் நியமிக்கப்பட்ட டிடிவியை ஓரங்கட்டிவிட்டு ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைதொடர்ந்து ஆறுமுகசாமி, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் தலைவராக பொறுப்பேற்று விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த விசாரனை உண்மையாக நடைபெறாது எனவும், எனவே இதை ரத்து செய்ய கோரியும் ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த மனுவில் தகுந்த முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.