
எனது அத்தையின் சொத்தான போயஸ் தோட்டத்தை நான் மீட்டுவிடுவேன் என்ற பயத்தில்தான் டி.டி.வி.தினகரன் ஆள் வைத்து எங்களை மிரட்டினார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தீபா, 1965 ஆம் ஆண்டு போயஸ் தோட்ட இல்லம் வாங்கப்பட்டது,ஜெ,வின் தாயார் சந்தியா பெயரில் வாங்கப்பட்ட இந்த சொத்து பின்னர் ஜெயலலிதா பெயருக்கு சந்தியா உயில் எழுதி வைத்தாக தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதாவுக்குப் பிறகு அந்த சொத்து, சந்தியாவின் பேரன், பேத்திகளுக்கு சோந்தமாகும் என்றும் சந்தியா தனது இறுதிக்காலத்தில் உயில் எழுதி வைத்தாக குறிப்பிட்டார்.
இதே போல ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டமும் ஜெயலலிதாவுக்குப் பிறகு எங்களுக்குத்தான் சொந்தம் என தீபா குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்குவது என்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அது தங்களது பூர்வீக சொத்து என்றும் தெரிவித்தார்.
ஒரு சிலர் தேவையில்லாமல் இப்பிரச்சனையை அரசியலாக்குகிறார்கள் எனவும் தீபா கூறினார். இந்த போயஸ் தோட்டத்தை நான் மீட்டுவிடுவேன் என்ற பயத்தில்தான் டி.டி.வி.தினகரன் ஆள் வைத்து எங்களை மிரட்டினார் எனவும் தீபா குறிப்பிட்டார்.