
ஆர்.கே. நகர் இடை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி அதிமுகவின் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய 3 அணிகளும் தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதேபோல், சசிகலா அணியில் யாரை நிறுத்துவது என தினகரன், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் சசிகலா அணியில் இருந்த மதுசூதனனை ஆர்கே நகர் தொகுதியில், தேர்தலில் களம் இறக்க முடிவு செய்தனர். ஆனால், அவர் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில், ஆர்.கே.நகர் தொகுதியில் யாரை களம் இறக்குவது என தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் ஆர்.கே. நகர் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இங்கு அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சேகர்பாபு, வெற்றிவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதற்கு காரணம்
மதுசூதனன் தான் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர், முன்னிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதைவிட, மதுசூதனனையே நிறுத்தலாம் என ஓ.பி.எஸ். தரப்பில் பேசப்படுவதாக தெரிகிறது.
இதனால், ஓரிரு நாட்களில், தனது அணியில் ஆர்.கே. நகர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒ.பி.எஸ். அணியுடன் கூட்டணி வைத்து தீபா போட்டியிடுவதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் தீபா, ஓ.பி.எஸ்.சுடன் மரியாதை நிமித்தமாக பேசியதாகவும், தனித்து தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். இதனால், அதிமுகவின் வாக்கு வங்கி உடையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், அதிமுக 3 அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால், திமுக ஆனந்தம் அடைந்துள்ளது. ஒரே கட்சியில் 3 அணிகள் களம் இறங்குவதால், திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுள்ளது.