
மயிரிழையில் இப்போதைக்கு தப்பியிருக்கிறது தமிழக மீடியா! நல்ல வேளையாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வாய்ப்பை பெற்றுவிட்டார் தீபா. சரி, இதில் தமிழக மீடியா தப்பியது எப்படி? என்று கேட்பவர்களுக்கு விடையை கடைசி பாராவில் சொல்கிறோம்.
பென்ஷன் வாங்கும் வயதை எப்பவோ எட்டிவிட்ட மதுசூதனனும், ‘யாருபா அந்தாளு?’ என்று சேகர்பாபுவே சவுண்டு விட்டு கேட்குமளவுக்கு அறிமுகமேயில்லாத மருதுகணேஷும், சின்னத்தை இழந்து சிங்கிளாய் நிற்கும் தினகரனும், எதற்கு தேர்ந்தெடுத்தார்கள்? என்று புரியாமலே வேட்பாளராகி இருக்கும் கருநாகராஜனும், எந்த கட்சியிலும் உறுப்பினர் கார்டு கூட போடாத விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கும்போது! பேபிம்மா மட்டும் போட்டியிடக்கூடாதா?
கடந்த இடைத்தேர்தலில் பேபிம்மா @ தீபா படகு சின்னத்தில் களமிறங்கிய பிறகுதான் காசிகுப்பத்தில் மீனவர்களுக்கு அள்ளிக்கோ, தள்ளிக்கோ என்று மீன்கள் குவியல் குவியலாய் கிடைத்தது. பாய்மரம் வெச்சிருந்த அந்தோணியெல்லாம் மோட்டார் போட்டு வாங்குனது பேபிம்மாவின் செண்டிமெண்டில்தானே! அன்று மட்டும் தேர்தல் நடந்திருந்து பேபிம்மா ஜெயித்திருந்தால் இந்நேரம் ஆர்.கே.நகரை மோடியே பொறாமை பட்டு பொசுங்குமளவுக்கு ஸ்மார்ட் சிட்டியாக்கியிருப்பார் பேபிம்மா. ஜஸ்டு மிஸ்டு! ஆங்!
இருந்தாலும் பரவாயில்லை என இதோ மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்க தயாரானார். அப்ளிகேஷனில் இணைக்க ஆதார் கார்டு ஜெராக்ஸ் முதல், வாழ்க கோஷம் போடும் பயபுள்ளைகளுக்கு ஆம்லெட்டுக்கு காசு வரை நேத்து ராத்திரியே ரெடி பண்ணி வைத்துவிட்டார் ஆயில் ராஜா. இன்னைக்கு பொழுது விடிஞ்சுடுச்சு! ஆளாளுக்கு தயார். மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான இன்று தீபா களமிறங்கிவிட கூடாது! இறங்கினால் நமக்கு டெப்பாசீட் கிடைக்குமோ கிடைக்காதோ எனுமளவுக்கு பயந்து சர்வகட்சி தலைவர்களும் சர்வமத பிராத்தனையில் இறங்காத குறையாக பிரே பண்ணிக் கொண்டிருந்தனர்.
அந்த எஃபெக்டோ என்னமோ எப்பவும் மதியம் பனிரெண்டரை மணிக்கே எழுந்து பெட் காஃபி கேட்கும் தீபாம்மா இன்னைக்கு ஒன்றை தாண்டியும் ஒரு சமிஞையும் காட்டாமல் தூங்கிவிட்டார். தொண்டர்கள் துவண்டுவிட, ராஜா வெகுண்டுவிட ஒரு வழியாய் ஒருமணிக்கெல்லாம் எழுந்த பேபிம்மா மளமளவென தயாராகி காரேறிவிட்டார்.
மணி ரெண்டரையை தொட்டபோது தண்டையார்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல். பேபிம்மா வந்துடுவாரா? மனு தந்துடுவாரா? என்று ஆளாளுக்கு ஏங்கி கிடந்தனர். அவரது கணவர் (!?) மாதுக்குட்டி கூட இதற்காக தனி தியானத்திலமர்ந்து நோக்காத வர்மம் மூலம் போக்குவரத்தை கிளியர் பண்ணிக் கொண்டிருந்தார்.
கடிகார முள் 3ஐ நெருங்க நெருங்க, ஆளாளுக்கு பி.பி. எகிறி நிற்க, ’இறைவா இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா?’ என்று ஆயில் ராஜா ஆலயங்களை நோக்கி ஜெபமிருக்க, மணி 3ஐ தொடுவதற்குள் பேபிம்மா அலுவலகத்தினுள் நுழைந்துவிட்டார்.
வந்த வேகத்தில் ‘அம்மாவோட வாரிசு வந்திருக்கேன். வழிய வுடு’ என்று செக்யூரிட்டி முதல் செலக்ஷன் கிரேடு ஆபீஸர் வரை அத்தனை பேரிடமும் ரவுண்டு கட்டி சண்டை போட்டுவிட்டு மனு தாக்கல் பண்ணுவதற்கான டோக்கனை வாங்கிவிட்டார். டோக்கன் எண் 91. அப்பாடா இனி பேபிம்மா நிம்மதியாக மனு தாக்கல் செய்யலாம்.
மனு தள்ளுபடியாகுமா அல்லது செல்லுபடியாகுமா என்பதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.
சரி, தமிழக மீடியா எப்படி தப்பியது? என்கிறீர்களா!...செம சீரியஸாக தேர்தல் வேலைகள் போய்க் கொண்டிருக்கையில் ஜஸ்ட் ரிலாக்ஸ்ட் செய்து கொள்ள பேபிம்மாவின் பிரச்சாரத்தை விட்டால் வேறேது தலைவா?