கடலூர் முந்திரித் தோப்பு மரணம்.. திமுக எம்.பிக்கு தொடர்பு.. பாமக வழக்கறிஞர் பாலு பகீர் குற்றச்சாட்டு.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 5:01 PM IST
Highlights

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த கோவிந்தராசின் வழக்கானது தி.மு.க எம்.பி ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் கிடப்பில் இருப்பதாகவும், தி.மு.க எம்.பி-யின் தலையீட்டு இருப்பதால் காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

கடலூர் மாவட்டத்தில் முந்திரித் தோப்பில் நடந்த மரணம் தொடர்பான வழக்கில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிருப்பதால் வழக்கை சி.பி ஐ-க்கு மாற்ற வேண்டுமென பா.ம.க வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராசு, கடலூர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ் ரமேஷிற்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20 ஆம் தேதி முந்திரி தோப்பில் மர்மமான முறையில் கோவிந்தராசு மரணமடைந்து கிடந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கோவிந்தராசின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து முந்திரி தொழிற்சாலையின் உரிமையாளர் ரமேஷ், உதவியாளர் நடராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கோவிந்தராசின் மகன் செந்தில்வேல், பா.ம.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு உள்ளிட்டோர் டி.ஜி.பி அலுவலகத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு-வை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த கோவிந்தராசின் வழக்கானது தி.மு.க எம்.பி ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் கிடப்பில் இருப்பதாகவும், தி.மு.க எம்.பி-யின் தலையீட்டு இருப்பதால் காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இறந்த கோவிந்தராசின் உடலை ஜிப்மர் மருத்துவக் குழுவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது எனவும், அந்த பரிசோதனையில் அவரது உடலில் 14 காயங்கள் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதாகவும் கூறிய அவர், ஆனால் அதற்கான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றார். அதுமட்டுமல்லாமல் கோவிந்தராசு இறப்பதற்கு முன்னதாக படுகாயங்களுடன்  அவரை எம்.பி ரமேஷ் மற்றும் அவரது அடியாட்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும், அப்போது தீர விசாரிக்காமல் அவரை காவல் துறையினர் அனுப்பி விட்டதால்தான் கொலை நடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த வழக்கானது தற்போது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி இருப்பதாகவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் தீபா-வை உடனடியாக மாற்றி டி.எஸ்.பி தலைமையிலான அதிகாரியை நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த வழக்கினை உடனடியாக தீர விசாரித்து அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நடவடிக்கை எடுக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட வேண்டுமென டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்த வழக்கின் தன்மையை உணர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

click me!