
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படுகிறது. மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனி அணியாக செயல்பட்டு, அதிமுக தொண்டர்கள் சிலர், அவரது கட்சியில் இணைந்தனர்.
முதலமைச்சராக பதவியேற்க ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இரு அணியினரும் தங்ளது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். அதன்பேரில் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர கவர்னர் உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நடந்தது. ஆனால், அதில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால், அதுபோல் நடக்கவில்லை. இதனால், அமளி ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடக்கவில்லை.
சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடுகிறது என சட்டமன்ற செயலாளர் பூபதி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக உள்ளன. அதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வந்தார். சமீபத்தில் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 18 எம்எல்ஏக்கள், எடப்பாடிக்கு எதிராக தனி கோஷ்டி தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்தது.
மேலும் தற்போது, டிடிவி.தினகரன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவருடன் தங்க தமிழ்செல்வன் இருப்பதாக தெரிகிறது. இதனால், எடப்பாடியின் தலைமையில் ஆட்சி தொடருமா என்பது கேள்வி குறியாக உள்ளது.
இந்த நேரத்தில், சட்டப்பேரவை கூடினால், அதிமுகவில் உள்ள பிரிவினர்கள் தங்களது மெஜாரிட்டியை எப்படி காண்பிப்பார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர் பார்ப்பாக இருக்கிறது. இதைதொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த வலியுறுத்துவார்கள் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.