மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை... 13 மாதங்களில் இரண்டாவது முறை.. அதிமுக ஆட்சியின் அவலம்...

By Ganesh RamachandranFirst Published Nov 9, 2021, 12:36 PM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட விழுப்புரம் தளவானூர் தடுப்பணை மீண்டும் உடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 25 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை மதகு 13 மாதங்களில் இரண்டாவது முறையாக உடைகிறது.

விழுப்புரம் - கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் தளவானூர் மற்றும் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணை, 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும்கொண்டது. மொத்தம் 3 ஷட்டர்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும் தளவானூர் தடுப்பணை. இதன் மதகு இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உடைந்துள்ளது. கடுமையான மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் சேமிக்க முடியாமல் வீணாவதைக் கண்டு வேதனையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள். இந்த அணையை முன்னாள் அமைச்சரும், தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான சி.வி.ஷண்முகம் திறந்து வைத்தார்.

கடலுார் மாவட்டம் கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், பூண்டி, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், பூங்குணம், கோட்லாம்பாக்கம் என மொத்தம் 14 ஏரிகளுக்கு எனதிரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் மூலமும் - விழுப்புரம் மாவட்டத்தில் தளவானுார், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் தருவது இந்த தளவானூர் தடுப்பணை தான்.

கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திடீரென இந்த தடுப்பணை மதகு உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டி முடித்து ஐந்தே மாதங்களில் உடைந்த தடுப்பணையைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். அந்த காலகட்டத்தில் பேட்டியளித்த சி.வி.ஷண்முகம், அணை மதகு நன்றாக தான் இருக்கிறது, தடுப்பு சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது, 7 கோடி செலவில் அது சரி செய்யப்படும் என்றார். திமுகவினர் பொன்முடி தலைமையில் போராட்டத்தில் இறங்கவே, தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வடதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் இந்த காலகட்டத்தில், பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏறக்குறைய அனைத்து ஏரிகளும் நிரம்பி வருகின்றன. கனமழையால் கடலூர் மாவட்டத்தில் ஓடும் கெடிலம், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. பெருமார் ஏரியின் முழு கொள்ளளவான 6.5 அடியில் 5.9 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 2849 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. 3359 கன அடி தண்ணீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில்தான் தாளவனூர் தடுப்பணையின் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கட்டி முடிக்கப்பட்டு 13 மாதங்களில் 2 முறை தளவானூர் தடுப்பணை உடைந்திருப்பதை உடனடியாக அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மீண்டும் இது போல் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்துக்கும் மேலே 13 மாதங்களில் 2 முறை உடைப்பு ஏற்பட்டதற்கும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதற்கும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவறு யார் செய்திருந்தாலும் கடும் த்கண்டணை அளிக்க வேண்டும் என்பதே விழுப்புரம் மற்றும் கடலூர் விவசாயிகளின் கோரிக்கை.

click me!