ராஜேந்திர பாலாஜிக்கு செக்... முன்னாள் அமைச்சரை கதிகலங்க வைத்த கே.டி.ஆர்..!

By Thiraviaraj RMFirst Published Jan 23, 2022, 11:38 AM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களையே தாறுமாறாக விமர்சனம் செய்து மாவட்டச் செயலாளர் பதவியையே இழந்தவர் ராஜேந்திர பாலாஜி

சிறையிலிருந்து ஜாமீனில் வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை, சக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், மற்றும் ராஜன்செல்லப்பா ஆகியோர் கடந்த 18-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

 “கட்சியில் யாருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை” என்று வேதனையில் உருகிய கே.டி.ராஜேந்திர பாலாஜியை சமரசப்படுத்தவே இவர்களை அனுப்பி வைத்தாராம் எடப்பாடி. தைரியமும் ஆறுதலும் சொன்ன கையோடு, ஓபிஎஸுக்கும், ஈபிஎஸுக்கும் போன்போட்டுக் கொடுத்து பேசச் சொன்னார்களாம். இந்தச் சந்திப்பின் போது ஒரே ஒரு முன்னாள் அமைச்சர் மட்டும், “ஜெயில்ல வசதி எல்லாம் எப்படி இருந்துச்சு..? ஜெயிலுக்குள்ள நம்மள எப்படி டீல் பண்றாங்கண்ணே” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தாராம். அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொன்ன பாலாஜி, “என்னண்ணே... அடுத்து நீங்கதான்னு முடிவு பண்ணீட்டிங்களா..? என்று கேட்டு திணறடித்தாராம்.

இது ஒருபுறமிருக்க, சென்னை அரசியல் செல்லுபடி ஆகாததால், மீண்டும் சொந்த மாவட்டத்துக்கு திரும்பிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிர அரசியலில் குதித்துவிட்டார். விருதுநகரில் அலுவலகம் திறந்து ஆக்டிவ் அரசியலுக்குள் குதித்திருக்கும் மாஃபா, எம்ஜிஆர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து, திமுக அரசின் பொங்கல் சிறப்புத் தொகுப்பை விமர்சித்துப் பேட்டியும் கொடுத்தார். 

சும்மா கிடந்தவரை இப்படி சொந்த ஊர் பக்கம் தீவிர அரசியலுக்கு திருப்பிவிட்டவர் முன்னாள் மீடியா புள்ளி ஒருவர் என்கிறார்கள். “அதிமுக ஒருங்கிணைப்பாளர்களையே தாறுமாறாக விமர்சனம் செய்து மாவட்டச் செயலாளர் பதவியையே இழந்தவர் ராஜேந்திர பாலாஜி. மீண்டும் அவர் அந்தப் பதவிக்கு வந்துவிட்டாலும் அவர் மீது தலைமைக்கு அவ்வளவாய் நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால்தான் அவர் ஜெயிலுக்குப் போனதைக்கூட பெருசா கண்டுக்கல. இதுதான் உங்களுக்கு சரியான நேரம்.

 இப்ப நீங்க இறங்கி அடிச்சீங்கன்னா, இங்க இருந்து உங்கள சென்னைக்கு துரத்திவிட்ட ராஜேந்திர பாலாஜியை ஓரங்கட்டி மாவட்ட அரசியலை கையில எடுத்துடலாம்” என்று அந்த மீடியா புள்ளியுடன் சேர்ந்து, பாலாஜிக்குப் பிடிக்காத பாலிடிக்ஸ் பங்காளிகளும் மாஃபாவை கொம்பு சீவிவிட்டு இருக்கிறார்கள் எனக்கூறுகின்றனர்.

click me!