எட்டு மாதங்களில் எட்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்வு... எந்த வகையில் நியாயம் என அன்புமணி கேள்வி.!

By Asianet TamilFirst Published Oct 6, 2021, 8:45 PM IST
Highlights

கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் எட்டாவது விலை உயர்வை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து விலை உயர்ந்துவந்த நிலையில், தற்போது ரூ. 900 என்ற அளவில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்திவிட்டன.  சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டதால், தற்போது அதன் விலை ரூ. 915 ஆக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை, நடுத்தர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்ப பெறப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “பிப்ரவரி  மாதத் தொடக்கத்தில் ரூ.710 ஆக இருந்த எரிவாயு விலை இப்போது 205 ரூபாய் அதிகரித்துள்ளது. அத்தியவசியப் பொருளான எரிவாயு விலை 8 மாதங்களில் 29% உயர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இன்னொரு பதிவில், “வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 900 ரூபாயிலிருந்து ரூ.915 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டாவது விலை உயர்வு இதுவாகும். சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல!” என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!