ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது இதே வழக்கில் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொன்னாரா இல்லையா? என கேள்வி எழுப்பிய சிவி சண்முகம் அது நார வாயா? அல்லது இப்போது இருப்பது நார வாயா? என விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜி நாட்டுக்காக போராடியவரா?
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைப்பெற்றுள்ளது. மேல் விசாரனைக்கு அழைத்து சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
undefined
ஆனால் இதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பா.ஜ.கவை விமர்சித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி நாட்டுக்காக போராடியவர் போன்று சித்தரிக்கிறார்கள். டாஸ்மாகில் நேற்று கூட இருவர் உயிரிழந்துள்ளனர். உலகத்திலேயே சையனைட் உட்கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து இறந்தது தமிழ்நாட்டில் தான். மதுபான ஆலையில் சையனைட் கலந்து தான் மது வெளியே வருகிறதா? என கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜியை ஓடோடி சென்று பார்ப்பது ஏன்.?
தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் சட்ட விரோதமாக செயல்படுகிறது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் செந்தில்பாலாஜி மூலம் முதலமைச்சர் குடும்பத்துக்கு செல்கிறது. இது குறித்து ஆளுநரிடம் புகார் அளித்த போது இதில் முதலமைச்சருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தமா என கேட்டார். அதற்கு இன்றைய காட்சிகளே சாட்சி. செந்தில்பாலாஜியை முதலமைச்சர் , உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் ஓடோடி சென்று பார்கிறார்கள்.
செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட போது திமுக கூட்டணி கட்சிதலைவர்கள் எங்கு போனார்கள் என கேள்வி எழுப்பியவர், ஆனால் இன்று அத்துமீறல், மனித உரிமை மீறல் என குரல் கொடுக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. செந்தில்பாலாஜி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
ஸ்டாலின் கைது செய்ய சொன்னாரா.? இல்லையா?
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது நடந்த முறைகேடு, 2015, 2016, 2018 ஆம் ஆண்டுகளில் செந்தில்பாலாஜி மீது புகார் அளிக்கப்படுகிறது. வழக்கு நீதிமன்றம் சென்றபோது 2019 ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021 ல் அமலாக்கத்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு கால தாமதமாக செந்தில் பாலாஜி தான் காரணம். செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு தான் காரணம். இதில் மத்திய அரசுக்கோ அமலாக்கத்துறைக்கோ தொடர்பு இல்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது இதே வழக்கில் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் சொன்னாரா இல்லையா?அது நார வாயா? அல்லது இப்போது இருப்பது நார வாயா?
பரிசுத்த ஆவியாக மாறிவிட்டாரா.?
செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்ததும் பரிசுத்த ஆவியாக ஆகிவிட்டாரா? அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு கால தாமதமாக செயல்பட்டது என உச்ச நீதிமன்றமே விமர்சித்துள்ளது. 2016- 2021 வரை கைது நடவடிக்கைகளில் செந்தில்பாலாஜி தப்பிக்க உதவிய அமலாக்க துறைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள ஒரு குற்றவாளியை சந்திக்க முதலமைச்சருக்கு எப்படி அனுமதிக்கப்பட்டது? அதுவே முதல் தவறு. அப்படி இருக்கையில் ஓமந்தூரார் மருத்துவமனையின் அறிக்கையில் எப்படி உண்மை இருக்கும்.
குற்றவாளிக்கு ஆதரவாக அறிக்கை தருவது சட்டப்படி குற்றம். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்படி தவறு இருக்கும்பட்சத்தில் அறிக்கை அளித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும். மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து பரிசோதித்து அறிக்கை தர வேண்டும் என சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.