அமைச்சர் அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது தலைக்குனிவு என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவால் கைது
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் நேற்று நள்ளிரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க செந்தில் பாலாஜி சார்ந்த இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை அமலாக்க துறை விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டதாக கூறினார்.
undefined
திமுகவினரின் பல ஆயிரம் கோடி ஊழல்
டாஸ்மாக்கில் உள்ள 6 ஆயிரம் கடைகளின் பார்களுக்கு டெண்டர் விடாமல் அரசுக்கு வர வேண்டிய வருமானம் மேலிடத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பார்கள் தற்போது முறைகேடாக இயங்கி வரும் நிலையில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். பல்லாயிரக்கணக்கான கோடி இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் ஆடியோவில் கூட திமுக ஊழலை தெளிவாக சொல்லி இருக்கிறார். இது குறித்து ஆளுநரிடம் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தமர் போல இன்று பேசி உள்ளார். பாஜக அரசு திட்டமிட்டு ரெய்டு நடத்துவதாக கூறுகிறார். இதே முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது 2016 ல் ரெய்டு நடத்திய போது பேசியதை எடப்பாடி பழனிசாமி சுட்டி காட்டி விமர்சித்தார்.
ராஜினாமா செய்ய வேண்டும்
செந்தில் பாலாஜி ஊழல் செய்த ஆதாரத்தின் பேரில் தான் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை தடுத்து நிறுத்தியதற்காக ஜெயக்குமாரை கைது செய்து அழைக்கழித்தனர். உடமைகள்.மாத்திரை மருந்து கூட எடுக்க விடவில்லை எனவும் கூறினார். எனவே மனிதாபிமானம் குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.செந்தில்பாலாஜி தான் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் நாடகம் நடத்துகிறார். தங்களுக்கும் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனைக்கு விரைகிறார்கள். தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் சோதனை நடத்தியது தலைக்குனிவு என தெரிவித்தவர் தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்