தேர்தலுக்கு பின்னர் சென்னையில் ஊரடங்கு தீவிரம்.? கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பிரகாஷ்

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2021, 12:45 PM IST
Highlights

தேர்தலின் பிறகு சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த கசப்பான அனுபவத்தை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.  

ஏப்ரல் இறுதிக்குள் சென்னையில் கொரோனா கட்டுக்குள் வரும் எனவும், தேர்தலின் பிறகு சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னை தனியார் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணல் சிற்பத்தை பார்வையிட்ட பிறகு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் மெரினா கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்தார்,  அப்போது பேசிய அவர் " வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு , வாக்களிக்கும் ஜனநாயக கடமையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கல்வித்துறை இணை ஆணையர் மூலம் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த தேர்தல்களில்  குறைவான வாக்கு சதவீதம் பதிவான இடங்களில் ஆசிரியர்கள் மூலம் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்குப் பதிவை எட்டுமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட வேண்டும், மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு எந்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின் முதல் நாள்தான் யார் எந்த வாக்குச் சாவடிக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும்  அரசு ஊழியர்களுக்கு நாளை இறுதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

தற்போதைய நிலையில் 52 கோடி வரை சென்னை மாவட்டத்தில் பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாகனங்கள் தினம்தோறும் சோதிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் 21 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருக்கின்றனர். வேட்பாளர்கள் 30 லட்சத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. இதுவரை 18 முதல் 20 கம்பெனி துணை ராணுவப்படையினர் சென்னை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். சென்னையில் 4 தொகுதிகளில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறையின் உளவுப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவற்றின் பெயர்களை வெளிப்படையாக கூற முடியாது. 

இரவில் மின் விநியோகம் தடை படுவதாக இதுவரை அரசியல் கட்சியினரிடமிருந்து புகார்கள் ஏதும் வரவில்லை. புகார் செயலிகளிலும்  ஒரு புகார் கூட பதிவாகவில்லை. சென்னையில் 19,000 மின்மாற்றிகள் உள்ளன. மின் தடை இயல்பானதாகவே இதுவரை இருந்துள்ளது. பிரசார கூட்டங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை  கண்காணிப்பது மட்டுமே எங்கள் பணி இல்லை, அரசியல் கட்சிகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை ஆணையருடன் நேற்று ஆலோசனை நடத்தினோம்.  வரும் நாட்களில் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனையில் 6,000 பேர் ஈடுபட உள்ளனர். 

250 வீடுகளுக்கு ஒரு நபர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வார். சென்னையில் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம். மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து தேர்தலின் பிறகு சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த கசப்பான அனுபவத்தை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றி வாக்களிக்கலாம். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே வாக்கு சாவடியினுள் அனுமதி.
 

click me!