
கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமானதாக, புதிய மாற்றங்களுடன் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடிக்கான சிறப்பு நிதி குறித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், அரசு என்ன செய்ய போகிறது? என்று ப. சிதம்பரம் டுவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது டுவிட்டர் பதிவில்;- நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி.
கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது? என பதிவிட்டுள்ளார்.