
கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் பணியாற்றிவந்த ஊழியர் கோவிந்தராசு மா்மமான முறையில் இறந்தார். கோவிந்தராசை திமுக எம்.பி. ரமேஷ் அடித்துக்கொன்றதாக கோவிந்தராசின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் நடந்த விசாரணையின் முடிவில், அந்த கம்பெனியில் பணியாற்றிய 5 ஊழியர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்.
அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டா். இந்நிலையில், ரமேஷ் சார்பில் ஜாமீன் கேட்டு, அவருடைய வழக்குரைஞா் சிவராஜ் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ரமேஷுக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்த கோவிந்தராசு தரப்பு ஆட்சேபம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை படித்துப் பார்க்க ரமேஷின் வழக்கறிஞர் சிவராஜ் ஒரு நாள் அவசாகம் கேட்டார். இதனையடுத்து வழக்கை 23-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இந்த கொலை வழக்கில் முகாந்திரம் உள்ளது. எனவே ரமேஷ்க்கு ஜாமீன் தரக் கூடாது என்று சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.