நாளைக்கு தீபாவளி… 2 மணி நேரம்தான் கணக்கு …மீறினா 6 மாசம் களிதான்…

By Selvanayagam PFirst Published Nov 5, 2018, 8:51 AM IST
Highlights

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க  உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாக உள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் தீபா உள்பட பல பிரபலங்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.

ஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

தீபாவளி பண்டிகைக்கு இன்று முதல் நாளை வரை பட்டாசு வெடிப்பார்கள். இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக அளவில் பட்டாசு வெடிப்பார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அமல்படுத்தப்படும்.அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

click me!