சபரிமலை சன்னிதானம் அருகே பாதுகாப்புக்காக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள்….காவல்துறை அதிரடி …

By Selvanayagam PFirst Published Nov 5, 2018, 8:07 AM IST
Highlights

சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இரண்டாவது  முறையாக இன்று மாலை மணிக்கு திறப்படவுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து  அங்கு அதிஉயர் பாதுகாப்பு கமாண்டோ படையினர் உள்பட 2,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட  15 பெண் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக கோவில் திறக்கப்பட உள்ளது.

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக  இன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. 

ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3,731 பேர் கைது செய்துள்ளனர். 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கமாண்டா படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலில் அமைதியான முறையில் தரிசனத்தை உறுதிசெய்யவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேவைப்பட்டால் கோவில் சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்குள் மேல் உள்ள 30 பெண் போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதன்முறையாக சன்னிதானம் அருகே 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் போலீஸ் அதிகாரிகள் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்..

click me!