திண்டுக்கல் சீனிவாசன் மீது ஏன் நடவடிக்கை இல்லை... அவரது பேச்சை ரசிக்கிறீர்களா? ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.-ஐ விளாசும் சி.ஆர்.சரஸ்வதி

First Published Jun 20, 2018, 3:10 PM IST
Highlights
CR Saraswati condemned OPS - EPS


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது உண்மையிலேயே விசுவாசம் இருந்தால், திண்டுக்கல் சீனிவாசன் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக் கூட்ட மேடைகளில் பேசும்போது எதையாவது உளறிக்கொட்டி சிக்கலில் மாட்டிக் கொள்வார். பின்னர் அதற்கு அவர் ஒரு நீண்ட விளக்கமும் அளிப்பார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர், ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் பொய் சொன்னோம் என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் அருகே பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் திருடி
தற்போது கட்சி நடத்துகிறார் என பேசி அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.

இதனிடையே அவர் தான் பேசிய பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல்
மாவட்டம் வேடசந்தூரில், கடந்த 18 ஆம் தேதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நான் கலந்து
கொண்டு பேசினேன். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டதை பற்றி குறிப்பிட்டேன்.

ஜெயலலிதாவின் புகழை வைத்து, 30 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல்
தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேன். நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசிய திண்டுக்கல்
சீனிவாசனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கண்டிக்காதது ஏன்? என்றும் அல்லது அவரது பேச்சை வரவேற்கிறார்களா? என்றும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல வெப்சைட் ஒன்றுக்கு பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அரசு மாதிரி ஒரு துரோக அரசை பார்த்ததே இல்லை.
ஜெயலலிதாதான் இவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தார். 10 வருடங்களுக்கு மேலாக திண்டுக்கல் சீனிவாசனை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். 12 வருடமாக அவரை ஜெயலலிதா திரும்பியே பார்க்கவில்லை. 
 
பெத்த பிள்ளைகள் மீது சத்தியம் செய்து, அம்மாவை பார்த்தேன் என்றார் திண்டுக்கல் சீனிவாசன். பதவி போய்விடும் என்று சொன்னவுடன் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணியதை மறந்துவிட்டு, நான் பேசியது பொய் மன்னித்துவிடுங்கள் என்கிறார்.
 
2016 தேர்தலின்போது சசிகலா சிபாரிசில்தான் திண்டுக்கல் சீனிவாசனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதை நான் நேரில் விவாதிக்க தயார். இதனை
இல்லை என்று அவரால் சொல்ல முடியுமா? போட்டியிட வாய்ப்பு கொடுத்தவரையே கொள்ளையடித்ததாக பேசுகிறாரே... இன்று இவர்கள் அடிக்காத கொள்ளையா? 

 
கொள்ளையடிப்பதற்காகவே இந்த ஆட்சியை நடத்துகிறார்கள். கொள்ளையடிப்பதை தவிர வேறு எந்த பணிகளையும் அவர்கள் செய்யவில்லை. அம்மாவையே கொச்சைப்படுத்தி பேசிவிட்டு பிறகு ஏன் அம்மாவின் அரசு, அம்மாவின் ஆட்சி என்று சொல்கிறீர்கள்?. 

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை, முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ அது பற்றி கேட்க முடியாதா? அந்த பேச்சை வரவேற்கிறார்களா? அல்லது
திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை ரசிக்கிறார்களா? அவர்களால் கேட்க முடியாது. ஏனென்றால் பயம். ஏதாவது கேட்டு விலகி போய்விட்டால்... ஆட்சி
போய்விடும் என்ற பயம். யார் என்ன வேண்டுமானாலும் பேசுங்க. ஆட்சி இருக்கணும். பதவி இருக்கணும் என்று ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நினைக்கிறார்கள்.

அம்மாவை கொச்சைப்படுததி பேசிய திண்டுக்கல் சீனிவாசனைக் கண்டிக்காமல், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இருக்கிறார்கள் என்றால் நாளை அவர்களும் அம்மாவைப்
பற்றி கொச்சைப்படுத்திதான் பேசுவார்கள். அதற்கு இதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். நாளை அம்மா யார் என்று கேட்பார்கள் ஓ.பி.எஸ்-ம் இ.பி.எஸ்-ம். அம்மா மீது உண்மையிலேயே விசுவாசம் இருந்தால் திண்டுக்கல் சீனிவாசன் மீது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

click me!