ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா டீம் ஒபிஎஸ் டீம் என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். பின்னர் முதலமைச்சராக எடப்பாடியும் அதிமுக துணை பொதுச்செயலாளராக டிடிவியும் தேர்வு செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் ஒபிஎஸ் தரப்பில் இருந்து மதுசூதனும் இபிஎஸ் தரப்பில் இருந்து டிடிவியும் வேட்பாளராக களம் கண்டனர். இதையடுத்து இரு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியது. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இருதரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அப்போது டிடிவி தரப்பு பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற முயற்ச்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து டிடிவி தரப்பு அமைச்சரான சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பணப்பட்டுவாடா செய்ததற்காண ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 பேர் சோதனை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அதில் டிடிவி வீடு மற்றும் அலுவலங்களும் அடங்கும். இதுகுறித்து டிடிவியின் தீவிர விசுவாசியான சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டிற்கும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டிற்கும் மேற்கொண்ட நடவடிக்கையை தெளிவு படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். இதற்கு பதில் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் தான் வேட்பாளர் எனவும் அவருக்காக தான் விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்துள்ளார் எனவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சி.ஆர். அதை தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் சொல்லட்டும் என கூறி நழுவி சென்று விட்டார். ஏற்கனவே வருமான வரி சோதனையால் டிடிவி கதிகலக்கத்தில் உள்ளார். இந்நிலையில் சி.ஆர். சரஸ்வதியின் உளறல் அவரை மீண்டும் சிறைக்கே தள்ளிவிடும் போல கூறி அங்கிருந்தவர்கள் நகையாடினர்.