மாணவி சோஃபியாவை மிரட்டிய வழக்கு….. தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு …..

By Selvanayagam PFirst Published Oct 25, 2018, 11:05 PM IST
Highlights

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சி மாணவியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு  செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து சோபியா என்றஆராய்ச்சி மாணவி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோஃபியா அதற்கு மறுத்துவிட்டார்.

இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோஃபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோஃபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சோஃபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோஃபியாவை தமிழிசை மற்றும் பாஜகவினர் மிரட்டியதாக மாணவியின் தந்தை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் , தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாஜகவினர் 10 பேர் மீதும்  வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்குபதிவு செய்து அதன் விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20-ம் தேதி க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

click me!