
கர்நாடகா சட்டப் பேரவைக்கு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் கர்நாடகாவில் யார் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.
மீண்டும் காங்கிரஸ் மகுடம் சூடுமா ? பாஜ கைப்பற்றுமா ? தேவே கவுடா சிங் மேக்கராவாரா ? சற்று பொறுப்போம்...