
பிரதமர் நரேந்திர மோடி தரம்தாழ்ந்து பேசுவதாகவும், அதுஅவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று சுட்டிக்காட்டுமாறும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை மன்மோகன் சிங் எழுதியுள்ளார். அதில், “பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பிற கட்சித் தலைவர்களை பற்றி தேவையற்ற, மிரட்டும் வகையிலான, மோசமான வார்த்தைகளை மோடி பயன்படுத்துகிறார்; அது அவர் வகித்து வரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, அரசியல் சாசனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள குடியரசுத் தலைவர், பிரதமரை எச்சரிக்கை செய்ய வேண்டும்” என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இதற்கு முன் பிரதமர் பதவி வகித்த அனைத்து உயர்ந்த மனிதர்களும், கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி மக்களுக்கான கடமையை முறைப்படி ஆற்றி விட்டுச் சென்று இருக்கின்றனர்;
அவ்வாறிருக்க, போற்றத் தகுந்த நம்முடைய ஜனநாயக நாட்டில், அரசின் தலைமைப்பதவியில் இருக்கும் பிரதமர் மிரட்டும் தொனியிலும், எதிர்க்கட்சித் தலைவர்களை எச்சரிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவார் என கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்த கட்சித் தலைவர்களையும், பிரதமர் மோடிமிரட்டும் தொனியில் பேசக்கூடாது” என்றும், “காங்கிரஸ்கட்சியோ, அதன் தலைவர்களோ, இந்த மிரட்டல்களுக்கு பயப்படும் கோழைகள் இல்லை” என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சிக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், அகமது படேல், கபில் சிபல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.