வைகோ மகனுக்கு முடிசூட்டு விழா.. மதிமுக தலைமை கழக செயலாளராக ஆனார் துரை வைகோ..!

By Asianet TamilFirst Published Oct 20, 2021, 7:05 PM IST
Highlights

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு மதிமுகவில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், தன்னுடைய மகன் துரை வைகோ அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று வைகோ தெரிவித்திருந்தார். “அரசியலில் 28 ஆண்டுகளை கார் பயணம், நடைப் பயணம், சிறைச்சாலையில் ஐந்தரை ஆண்டுகள் என அழித்துக் கொண்டேன். என் மகனும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம்” என்று வைகோ தெரிவித்திருந்தார். ஆனால், அக்கட்சி நிர்வாகிகள் இதில் விடாப்பிடியாக இருந்ததால், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வைகோ ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு  பதவி வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த வாக்கெடுப்பில் 106 பேர் வாக்களித்தனர். இதில், 104 பேர் துரைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனையடுத்து, துரைக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்படுவதாக வைகோ அறிவித்தார்.
இக்கூட்டத்தில் வைகோ பேசுகையில், “துரை வைகோவை அரசியலுக்கு அழைத்து வருவதில் விருப்பமில்லாமல்தான் இருந்தேன். தொண்டர்கள்தான் அவரை கட்சிக்குள் இழுத்தனர். என் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வாரிசு அரசியல் கிடையாது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்திதான் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இனி முழு நேர கட்சி பணிகளை துரை கவனிப்பார்” என்று தெரிவித்தார். 

click me!