
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வீழ்ச்சியை சந்தித்த நிலையில் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
பசி, பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், வேலை இழப்பு என மோசமான விளைவுகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக வைரஸ் தொற்று மிக கடுமையாக குறைந்திருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கௌதம் நகரில் கடந்த 7 நாட்களில் 44 க்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தற்போது அது அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. நொய்டாவில் ஏராளமான குழந்தைகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து உத்தர பிரதேச மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கடந்த 7 நாட்களில் 44 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
நொய்டாவில் 167 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குழந்தைகளின் சதவீதம் 26.3 சதவீதமாக உள்ளது என அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நோய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே குழந்தைகளை பரிசோதித்த சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று அலைகள் முடிந்துள்ள நிலையில், நான்காவது அணை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஏற்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நான்காவது அலையின் துவக்கமாக இருக்கக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் நாடுமுழுவதும் நாளொன்றுக்கு 6 பேர் வரை இறந்து வருகின்றனர். இதுவரை இந்தியாவில் இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக அருகருகில் அமர்வதே மீண்டும் வைரஸ் பரவலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கூடம் திறக்கப்படாமல் இதே போன்ற சூழ்நிலையை தொடர்வது நாட்டிற்கு உகந்தது அல்ல என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் வீட்டிலேயே இருப்பது மாணவர்களின் கல்வியுடன் சேர்த்து மனநலமும் பாதிக்கப்படும் என்றும், 12 முதல் 15 வயதினருக்கான தடுப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அதேபோல் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.