
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டியிடம் தனிப்படை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் சசிகலாவின் உறவினரான விவேக்கிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஆறு குட்டியிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அடுத்தடுத்த அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதில் மிக முக்கியமானது கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் ஆகவும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. அதில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் அடிக்கடி தங்கி வசித்து வந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று இரவு பங்களாவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பாதுகாப்புக்கு இருந்த காவலாளி ஓம் பகதூரை கொன்றுவிட்டு பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலத்தில் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபராக சொல்லப்படும் சயானும் பாலக்காடு அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்கு ஆளானார். அதில் சயானின் மனைவி குழந்தையும் உயிரிழந்தனர். அதேபோல் அதில் தொடர்புடைய எஸ்டேட்டின் கணினி ஆப்பரேட்டர் தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி கொடநாடு எஸ்டேட்டை சுற்றி கொலை, கொள்ளை என மர்மங்கள் சூழ்ந்தன. இந்த வழக்கில் சையான் வளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அது நடந்து வருகிறது.
இந்நிலையில் கொலை குற்றத்தில் தொடர்புடைய சயான், மனோஜ், கனகராஜ் ஆகியோருடன் மறு விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது இந்த விசாரணையை தீவிரப்படுத்த மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது கோவை சேலம் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் இடத்தில் விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 2014ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இடம் கோவை பிஆர்எஸ் வளாகத்தில் தனிப்படை போலீசார் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த தகவல் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.