ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டில் இந்தியா ... ஒரே வாரத்தில் பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் இவ்வளவா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 25, 2021, 10:56 AM ISTUpdated : Apr 25, 2021, 11:01 AM IST
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டில் இந்தியா ... ஒரே வாரத்தில் பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் இவ்வளவா?

சுருக்கம்

நாட்டில் ஏற்படுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய கடந்த ஒரு வார அளவில் மட்டும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல நோயாளிகள் மடியும் நிலை உருவானது. உலகமே காணாத பேரழிவாக கொரோனா வைரஸின் கோரதாண்டவம் வல்லரசு நாடுகளையே புரட்டிப்போட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டி வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும் கூட எதிர் கட்சி தலைவர்கள் பலரும் கூக்குரலிட்டனர். ஆனால் நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்த ஒரே வாரத்தில் மட்டும் மோடி அரசு எவ்வாறு கையாண்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் அவர்கள் முகத்தில் எல்லாம் கரிபூசும் விதமாக அமைந்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய கடந்த ஒரு வார அளவில் மட்டும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

  • ஜெர்மனியில் இருந்து விமானம் வழியாக 23 நடமாடும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஒவ்வொரு இயந்திரமும்  ஒரு மணி நேரத்தில் 2,400 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 

 

  • வான் வழியாக ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தும் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

  • நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்திய ராணுவ விமானம் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து 4 கண்டெய்னர்களில் கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்து வர உள்ளது. 

 

  • இந்தியாவில் ஆக்ஸிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த இந்தியன் ரயில்வே மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

 

  • அனைத்து மாநிலங்களிலும் 262 ஆக்ஸிஜன் ஆலைகளை கட்டமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் 33 ஆலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

 

  • அம்பானி, அதானி, டாட்டா, ஜிந்தால் உள்ளிட்டோரின் தொழிற்சாலைகள் மூலமாகவும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

 

  • டெல்லியில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுடன் கூடிய 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 

 

  • கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு 40 லட்சம் யூனிட் அளவுக்கு தயாரிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை, 90 லட்சம் யூனிட்டாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு/ இந்தியா - திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்/ராணுவம் ஆகியன கொரோனா நோயாளிகளுக்காக படுக்கைகள், மருத்துவர்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்கியுள்ளன. 

 

  • மே 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

 

  • பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

 

  • கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கும் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும்,   இத்திட்டம் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இவை அனைத்தையுமே மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே வாரத்தில் செயல்படுத்தியுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மக்கள் இறந்ததை மறக்க முடியுமா?, அப்போது நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற ஓட்டுநர்களுக்கு டீசலுக்குக் கூட பணம் கொடுக்கப்படவில்லை.

இன்று பாதுகாப்பு கவச உடைகள், மாஸ்க், வென்டிலேட்டர் ஆகியவை கடந்த ஆண்டை விட அதிக அளவில் கையிருப்பில் உள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தொற்று நோய் பரவல், இதனை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே திண்டாடி வருகின்றன. சிலர் மோடியை எவ்வளவு விமர்சித்தாலும் வேறு எந்த தலைவராலும் இதுபோன்ற ஒரு தாக்குதலை கையாள முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

இதில் கசப்பான ஒரு உண்மை என்னவென்றால் கடந்த ஆண்டு மாநிலங்கள் தோறும் 162 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதியும் வழங்கப்பட்டது. ஆனால் அதில் 33 ஆலைகள் மட்டுமே மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசு மத்திய அரசு அனுமதித்த 8 ஆக்ஸிஜன் ஆலைகளில் ஒன்றை மட்டுமே நிறுவியுள்ளது. இதில் யாரை குற்றம் சொல்ல வேண்டும்?. கட்டமைப்பிற்காக பணத்தை அனுப்பி வைத்த மத்திய அரசையா?, அதை பயன்படுத்த தெரியாத மாநில அரசுகளையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!