தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை.. போலீஸார் எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Apr 24, 2021, 10:01 PM IST
Highlights

தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், அனுமதியின்றி வாகனத்தில் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சனிக்கிழமை (ஏப்.24) இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை (ஏப்.26) அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 30 மணி நேர முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏப்.24 இரவு 10 மணி முதல் ஏப். 26-ம் தேதி அதிகாலை 4 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஏப்.25 ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பணிகளுக்காகவும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. காய்கறிக் கடைகள் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
திருமணத்திற்கு 100 நபர்கள் மிகாமலும் இறுதிச் சடங்கிற்கு 50 நபர்கள் மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன”. என்று  சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 

click me!