கொரோனா நிவாரணம் ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published May 24, 2021, 4:48 PM IST
Highlights

 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவை சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்க கூடாது எனவும், நியாய விலை கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நியாய விலை கடைகளுக்கு திமுக நிர்வாகிகளை பெருங்கூட்டமாக அழைத்துச் சென்று நிவாரண நிதி வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சபாநாயகர் அப்பாவுவை வரவேற்று திமுக சின்னம் கொடி பொறித்த பேனர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரம் திமுகவினரால் வைக்கப்பட்டிருந்தது. அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.
 
மேலும் நிவாரண உதவியை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு பையை வீடு வீடாக சென்று வழங்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிவாரண உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நேரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், அங்கு அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும், பேனர்கள் வைக்க கூடாது எனவும் வழக்கு தொடரப்பட்டதாகவும், தற்போதைய நிலையும், அப்போதைய நிலையும் வெவ்வேறு எனவும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிவாரண உதவி வழங்கும் போது, அரசு மட்டுமே முன்னிலைப்பருத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி சின்னத்தைப் பயன்படுத்த கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்ற கூடாது எனவும், அரசியல் சாயம் கொடுக்க கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

click me!