எப்பா ஒழிஞ்சதுடா சாமி.. இனி மாஸ்க் அணிய தேவையில்லை.. மாநில அரசுகள் அதிரடி அறிவிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2022, 10:55 AM IST
Highlights

அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமலில் இருந்த பேரிடர் மேலாண்மை சட்டம் விலக்கிக் கொள்ள படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிவித்துள்ளார், அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே முகக்கவசம் அணியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டை விலகியுள்ள நிலையில் அம்மாயிலங்களில் இனி முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. இது அம்மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மூன்று அலைகள் மனித சமூகத்தை தாக்கியுள்ளது. 4வது அலை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது 3வது அலை நாடு முழுவதும் நன்றாகவே குறைந்துள்ளது.  இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் தளர்த்தி வருகின்றன. அதேநேரத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பது தெரிந்தால் அந்தந்த மாநில அரசுகளே தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன. நாட்டிலேயே கொரோனா வைரசால் மிகக்கடுமையாக மகாராஷ்டிரா மாநிலம் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு தொற்று வேகமாக குறைந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. எனவே நாளை முதல் (2ஆம் தேதி) அம்மாநிலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் வைரஸ் தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் புத்தாண்டு குடிபட்வா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமலில் இருந்த பேரிடர் மேலாண்மை சட்டம் விலக்கிக் கொள்ள படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிவித்துள்ளார், அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே முகக்கவசம் அணியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை போலவே டெல்லியும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகும்.  அங்கு முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு முகக் கவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம்  வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அபராதம் விதிக்கப்படாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் கொரொனா வைரஸ் வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் வைரஸ் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று  கட்டுப்பாடுகள் விலக்குவதாக மேற்குவங்க மாநிலம் தெரிவித்துள்ள நிலையில், பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளைக் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இம்மாநிலங்களில் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

click me!