டெல்லி பயணத்தில் ஜெகன் மோகனை பாராட்டிய ஸ்டாலின்.. 3வது அணி ட்விஸ்ட்.. காங்கிரசுக்கு திகில் காட்டிய ஸ்டாலின் !

By Raghupati RFirst Published Apr 1, 2022, 10:48 AM IST
Highlights

டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க இருக்கிறார். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.

முதல்வர் டெல்லி பயணம் :

முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்று இருக்கிறார். நேற்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இதில் அவரிடம் நீட் தேர்வு விலக்கு உட்பட 14 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் நடக்க உள்ளது. 

திமுக சார்பாக திறக்கப்படும் இந்த கட்டிட விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். இந்த நிலையில் டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தற்போது சந்தித்து உள்ளார். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

மு.க ஸ்டாலின் - ஜெகன் மோகன் :

இந்நிலையில் நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பல எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர். அதனை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். டெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்கு ஸ்டாலின் சென்ற நிலையில், திமுக எம்.பிக்கள் வரவேற்றனர்.

அப்போது  முதல்வர் ஸ்டாலினிடம், ஒய்.எஸ்.ஆர் எம்பிக்கள் மகுண்டா சீனிவாசரெட்டி, மார்கனி பாரத், கோரண்ட்லா மாதவ், விஜயசாய்ரெட்டி, வெமிரெட்டி பிரபாகரரெட்டி, மோபிதேவி வெங்கடரமண, ரெட்டப்பா, ஸ்ரீகிருஷ்ணதேவராயலு, வங்கா கீதா, தலாரி ரங்கய்யா ஆகியோரை திமுக எம்பி கனிமொழி அறிமுகப்படுத்தினார். 

அப்போது ஆந்திர எம்பிக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆந்திர அரசு செயல்படுத்திய திட்டங்களை பாராட்டினார். பயனாளிகளுக்கு பணப் பரிமாற்றம் மற்றும் ஏழை மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களுக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பாராட்டினார். அப்போது ஜாதி வாரியான கணக்கெடுப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

click me!