இந்த 6 மாவட்டங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுகிறது.. ஓரிரு வாரங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.. முதல்வர் ஸ்டாலின்

By vinoth kumar  |  First Published May 27, 2021, 3:04 PM IST

இரண்டாம் அலையின் இந்தக் கட்டத்தில் நோய்ப் பரவல் கிராமப் பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட வேண்டும். 


கொரோனா 2வது அலை கிராம பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதால் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு ஆட்சியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட இந்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், மாவட்ட வாரியாக இத்தொற்றின் தாக்கத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இத்தொற்றின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

எனவே, இந்த மாவட்டங்களில் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து உங்களது கருத்துகளைக் கேட்டறியவும், ஆலோசனை செய்திடவும் இந்த ஆய்வுக் கூட்டத்தை நான் கூட்டியுள்ளேன். இன்று ஆய்வு செய்யப்படும் ஆறு மாவட்டங்களைப் பொருத்தவரையில், அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் நல்ல மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாவட்டங்களாகும். இந்தக் கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.

நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்த மாவட்டங்களில் நன்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நோய்ப்பரவல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்றுள்ள அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போடும் பணியைப் பொருத்தவரை கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மற்ற நான்கு மாவட்டங்களிலும் 18 வயதிலிருந்து 44 வயது வரையில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகளை அதிக அளவில் உடனடியாக அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும்.

இரண்டாம் அலையின் இந்தக் கட்டத்தில் நோய்ப் பரவல் கிராமப் பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட வேண்டும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அரசு அளவில் தேவைப்படும் உதவிகள் பற்றியும் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவின் 2வது அலையின் தாக்கத்தை நமது மாநிலம் கட்டுப்படுத்துவதற்கு, இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார். 

click me!