கொரோனாவை விரட்ட அடுத்தடுத்து அதிரடி... முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனடி நடவடிக்கைகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 27, 2021, 2:26 PM IST
Highlights

சென்னை ராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமையும், பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா 2வது அலையை சமாளிக்கும்  விதமாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலும் சற்றே குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி முகாம்கள் மூலம் கோவிட் தடுப்பூசி தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தற்போது ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், முதலமைச்சர்  ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்கள். 

அதன் அடிப்படையில்,  இராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இராயபுரம் எம்.எல்.ஏ. மூர்த்தி,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மகளிருக்கென தனியாக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 8 மருத்துவர்கள், 16 செவிலியர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். மேலும், இந்த மையத்தில் உடனுக்குடன் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் 10 தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்படும் தொற்று பாதித்த நபர்களின் உடல்நிலை குறித்து அவர்களுடைய உதவியாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மையத்தில் மேல் சிகிச்சைக்காக அல்லது அவசர சிகிச்சைக்காக இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிரந்தரமாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைபெறும் நபர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை சார்பில் வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. 

click me!